தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக இருந்த மு.பே.சாமிநாதன் அண்மையில் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதனையடுத்து அப்பதவிக்கு நிர்வாகியை தேர்வு செய்யும் பணியை கட்சியின் தலைமை மேற்கொண்டது. அதன்படி திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமனம் செய்து திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில் திமுக இளைஞரணியின் அமைப்பாளர்கள் கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அந்த அணியின் தலைமை அலுவலகமான அன்பகத்தில் இன்று காலை நடைபெற உள்ளது. கட்சிப் பொறுப்பை ஏற்றபின் உதயநிதி பங்கேற்கும் முதல் கூட்டம் இதுவாகும். இக்கூட்டம் தொடர்பாக இளைஞரணி நிர்வாகிகளுடன் உதயநிதி நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இளைஞரணி செயலாளராக தாம் பொறுப்பேற்றப்பின் முதன்முதலில் நடைபெறவுள்ள கூட்டம் என்பதால், அதில் பங்கேற்க மிகவும் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார். கூட்டத்துக்குப் பின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறிய உதயநிதி, சுற்றுப்பயணத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.