தமிழ்நாடு

”திமுகவின் ஆட்சி திருப்தியாக இல்லை என மக்கள் கூறுகின்றனர்”- கமல்ஹாசன்

”திமுகவின் ஆட்சி திருப்தியாக இல்லை என மக்கள் கூறுகின்றனர்”- கமல்ஹாசன்

நிவேதா ஜெகராஜா

திமுகவின் 8 மாத கால ஆட்சி திருப்தியாக இல்லை என மக்கள் கூறுவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார்.

சென்னை மாமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 182 வேட்பாளர்களை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் 182 வேட்பாளர்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சி நன்கொடையாக, நிர்வாகியொருவர் 1 லட்சம் ரூபாயையும், கொளத்தூரை சேர்ந்த எட்வின் என்ற 6 வயது சிறுவன் தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 1000 ரூபாயையும் கமல்ஹாசனிடம் அளித்தனர்.

இந்த நிகழ்வில் மேடையில் பேசிய கமல்ஹாசன், ”நாட்டில் ஏழ்மையை தீர்க்க வேண்டும் என்றால், அதற்கு பெண்கள் பகுதிநேரமாவது அரசியலுக்கு வரவேண்டும். அப்படி அவர்கள் வந்தாலே, நாடு முழு நேரம் நல்லபடியாக மாறிவிடும். இன்றைய சூழலில் முழு நேர அரசியல்வாதி தேவையில்லை, ஏனென்றால் அவர்களுக்கு வேறு தொழில் தெரியாது.

தேர்தலில் போட்டியிடுபவர்களை மிரட்டும் ரௌடிகள் கூட்டம் பெரிது தான். ஆனால் அது வெறும் கூட்டம் மட்டுமே. அதற்கு முன் நமது கட்சி, ஒரு சங்கமம்.

விண்வெளிக்கு ராக்கெட் விடும் அரசு, மலம் அள்ளும் என் தம்பிக்கு ஒரு எந்திரம் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது. ஒரு ரூபாய் சம்பளம் என்று கூறிவிட்டு ஊரை கொள்ளையடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை. ஊரையை அடித்து உலையில் போடும்  மனநிலைia மாற்ற வேண்டும். கொஞ்சம் நேர்மையை கடைபிடித்தால் போதும், இங்கு நிலைமை மாறிவிடும். நேர்மையை கடைப்பிடிப்பதென்பது, கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் அது மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும். அதை பின்பற்றி ஆட்சியை மாற்றுவோம். ஆனால் அதேநேரம், ஆட்சியை மாற்றுவோம் என்று சொன்னால் மட்டும் போதாது. காட்சிகளையும் மாற்ற வேண்டும். முதலில் குடுமியை பிடிப்போம், பின்னர் ஆட்சியை பிடிப்போம்.

முதலில் தமிழ்நாடு முன்னுதாரணம் ஆக வேண்டும். அதற்கு சென்னை நகரத்தை மாற்றி அமைத்தாலேயே போதும். இங்கு இந்த நடராஜர் விளையாட்டு வேண்டாம். கீழே போட்டு மிதிப்பது வேண்டாம். நாங்கள் தனி தெய்வங்கள். அதுவும் காவல் தெய்வங்கள். எனது இந்த பேச்சு, என் நேர்மையால் வந்தது. இன்று என் கைகாசில் தான் நான் பெட்ரோல் போடுகிறேன்” என்றார்.

அதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “செய்யக் கூடிய விஷயங்களை செய்து காட்டும் வாய்ப்பாக இந்த தேர்தலை பார்க்கிறேன். மக்கள், சேவை பற்றியும் நேர்மையை பற்றியும் செய்யக்கூடிய விஷயத்தை செய்து காட்டும் வாய்ப்பாக இருக்கும். திமுகவின் 8 மாத ஆட்சி திருப்தியாக இல்லை என மக்கள் கூறுகின்றனர்” என்றார். தொடர்ந்து `தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வராது என்ற ராகுல் காந்தியின் கருத்து’ குறித்த கேள்விக்கு, “தமிழகத்தை ஒருபோதும் பாசிசம் ஆளக்கூடாது என்பதுதான் எனது கருத்து” என்றார்.

தொடர்ந்து நீட் விலக்கு விஷயத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு குறித்து கேட்கப்படுகயில், “நீட் விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஏஜெண்டாக செயல்பட கூடாது. மத்திய அரசு சொல்வதைதான் ஆளுநர் செய்கிறார்” என்றார். மேலும் தமிழகத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும் என்றால் முதலில் மதுரை உயர் நீதிமன்றத்தில் இருந்து தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.