தமிழ்நாடு

டாஸ்மாக் பார்களை ஏலம் எடுக்க தயார் - திமுக எம்.எல்.ஏ ரகுபதி

டாஸ்மாக் பார்களை ஏலம் எடுக்க தயார் - திமுக எம்.எல்.ஏ ரகுபதி

webteam

டாஸ்மாக் பார்களை ஏலம் எடுக்க திமுகவினரே தயாராக உள்ளனர் என சட்டப்பேரவையில் திருமயம் எம்.எல்.ஏ ரகுபதி கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் தொடர்பான விவாதத்தின் போது பேசிய ரகுபதி, “டாஸ்மாக் வருமானம் குறைய காரணம் பார்களை ஏலம் விடாமல் போனது தான். அப்படியானால் அந்தப் பணம் ரூ.1000 கோடி எங்கே போனது ? 
 பட்ஜெட்டிற்கு முன்பாகவே சர்க்கரை விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு மறைமுகமாக வரியை உயர்த்தப்பட்டுவிட்டது. டாஸ்மாக் கடைகளை ஏலம் எடுக்க திமுகவினரே தயாராக உள்ளனர். 
பூரண மதுவிலக்கே திமுகவின் கொள்கை” என்று கூறினார்.


எம்.எல்.ஏ ரகுபதியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி, மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என சொல்லும் திமுகவினரே டாஸ்மாக் கடைகளை ஏலம் எடுக்க தயாராக இருப்பதாக உண்மையை ஒத்துக்கொண்டனர்” என்றார். 

பின்னர் பேசிய எம்.எல்.ஏ ரகுபதி, மதுக்கடைகளில் உள்ள பார்களை ஏலம்விடப்பட வேண்டும்.  தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பார்களும் இதுவரை ஏலம் விடப்படவில்லை. ஏலம் விடப்பட்டிருந்தால் ஒரு பாருக்கு ரூபாய் 2 லட்சம் வீதம் ஆண்டிற்கு 900 முதல் ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் ஏற்பட்டிருக்கும். ஆனால் ஏலம் விடப்படவில்லை அந்த தொகை எங்கே போனது என கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த தங்கமணி, “அனைத்து பார்களும் ஏலம் விடப்பட்டு தான் இயங்கி வருகிறது. ஏலம் விடப்படாமல் முறைகேடாக நடக்கவில்லை. அப்படி நடக்கும் பட்சத்தில் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.