தமிழ்நாடு

திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு : மூவரும் கடந்து வந்த பாதை...!

திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு : மூவரும் கடந்து வந்த பாதை...!

webteam

நாடாளுமன்ற மாநிலங்க‌ளவை எம்பி பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைந்து தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் அரசியலில் கடந்துவந்த பாதை...

திருச்சி சிவா :

மாணவர் பருவத்திலிருந்து திமுகவில் இருந்து வரும் திருச்சி சிவா, நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது, மிசா சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் இருந்தவர். புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்கு 1996-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின்னர் 2002, 2007 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் திமுக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அவருக்கு 4-வது முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நாடாளுமன்றவாதி என்ற விருதை அண்மையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவிடமிருந்து பெற்ற திருச்சி சிவா, தனிநபராக கொண்டு வந்த திருநங்கை பாதுகாப்பு மசோதா, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது.

அந்தியூர் செல்வராஜ் :

கடந்த 1970-ஆம் ஆண்டு முதல் திமுகவில் இருந்து வரும் அந்தியூர் செல்வராஜ், தற்போது மாநில ஆதிதிராவிட நலக்குழு செயலாளராக உள்ளார். கருணாநிதி தலைமையில் 1996 முதல் 2001-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற திமுக ஆட்சியில், கதர்துறை அமைச்சராகப் பணியாற்றினார். கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், ஈரோடு மாவட்டத்தில் திமுக சார்பில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில் கொங்கு மண்டலத்தை வலுப்படுத்தும் வகையில் அந்தியூர் செல்வராஜூக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில், அதிமுக சார்பில் பட்டியலினத்தைச் சேர்ந்த சந்திரசேகருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேபோல் தற்போது திமுகவும் பட்டியலினத்தைச் சேர்ந்த அந்தியூர் செல்வராஜுக்கு வாய்ப்புக் கொடுத்திருப்பதாக தெரிகிறது.

என்.ஆர்.இளங்கோ :

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்த என்.ஆர்.இளங்கோ, திமுகவின் சட்ட ஆலோசகராக உள்ளார். சட்ட நகல் எரிப்பு வழக்கில், திமுக முன்னோடிகளில் ஒருவரும் மூத்த வழக்கறிஞருமான என்.வி.நடராஜனுக்கு உதவியாக இருந்தவர் என்.ஆர்.இளங்கோ. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக திமுக தொடர்ந்த டான்சி உள்ளிட்ட அனைத்து வழக்குகளிலும் வாதாடியவர். 2006 - 11 திமுக ஆட்சியின்போது குற்றவியல் கூடுதல் அரசு வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.