சட்டப்பேரவை நேற்று காலை கூடிய நிலையில் தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டதாகக் கூறி ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை வாசிக்காமல் வெளியேறினார். இதையடுத்து அந்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபை மீறுவதையே ஆளுநர் ஆர்.என்.ரவி தனது வழக்கமாக கொண்டிருக்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், ஆளுநரை கண்டித்து மாவட்டந்தோறும் திமுகவினர் இன்று காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்தவகையில், சைதாப்பேட்டையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக எம்பி கனிமொழி , “ பிஜேபி கூறுகிறார்களே ஓட்டு சதவீதம் ஏறிவருகிறது என்று..அது ஒவ்வொருநாளும் இறங்கி கொண்டுதான் இருக்கிறது. " என்று தெரிவித்து ஆளுநரை நோக்கி சரமாறியான கேள்விகளை எழுப்பினார். அதை கிழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
மறுபுறம் திமுகவின் இந்த கண்ட ஆர்பாட்டத்தை குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்ததலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ” ஆளுநர் பிரிவினை வாதத்தை தூண்டுகிறார் என்கிறார்கள். தேச ஒற்றுமையான தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுங்கள் என்று கேட்டால் அது பிரினை வாதம் என்கிற புதிய அர்த்தத்தை தமிழக அரசுதான் கொடுக்கும்..
நீங்கள் வேங்கை வயல் பிரச்னையை தீர்த்தீர்களா? .., உங்கள் அமைச்சரில் ஒருவரே ஆண்ட பரம்பரை என்று சாதிய பாகுபாடோடு பேசிகிறார். அதை கண்டித்தீர்களா?.. ஆக வேறுபாடையும், பிரிவினையையும் ஏற்படுத்துவது தமிழக முதலமைச்சர் அவர்கள்தான்.
ஆனால், ஆளுநர் தேசிய கீதம் தொடர்பாக கோரிக்கை வைத்தால் அதனை நிராகரித்து விட்டு அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம். தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை மறைப்பதற்காக இன்று ஆர்ப்பாட்டம் செய்கின்றீர்கள். கடந்த 10 நாட்களில் ஆயிரக்கணக்கான தலைவர்களும் தொண்டர்களும் கைதானார்கள். போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆக, எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுப்பு.. ஆளும் கட்சிக்கு அனுமதியா?
5 நாட்களுக்கு முன்பு அனுமதி பெற வேண்டும் என்று கூறுகிறீர்கள். ஆனால், நேற்று அனுமதி பெற்று இன்று நீங்கள் ஆர்ப்பாட்டம் பெறுவது எப்படி. அப்பட்டமாக எதிர்க்கட்சிகளின் குரல்வலை நசுக்கப்படுகிறது. தமிழகத்தில் ஜனநாயகம் இல்லவே இல்லை. தமிழ்நாட்டில் யார் அந்த சார்? என்று தேடும்போது, யார் அந்த பாட்டி என்றும் தேடிக்கொண்டுக்கிறார்கள். பொங்கல் தொகுப்பில் 1000 ரூபாய் கொடுக்காததை கண்டித்து ஒரு பாட்டி பேசுகிறார். இதனை அரசியல் பின்பலம் சாரா ஒரு நபர் காணொளியாக எடுத்து வெளியிடுகிறார். அந்த நபரை கைது செய்கிறார்கள்.. ஆக நீங்கள் எந்த அளவிற்கு கருத்து சுதந்திரத்தை நசுக்குகிறீர்கள்.” என்று தெரிவித்துள்ளார்.