தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் அவமதிக்கும் ஆளுநரைக் கண்டித்து இன்று காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.
சட்டப்பேரவை நேற்று காலை கூடிய நிலையில் தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டதாகக் கூறி ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை வாசிக்காமல் வெளியேறினார். இதையடுத்து அந்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
இதைத்தொடர்ந்து, ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியான விளக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பின் தேசிய கீதம் பாட வேண்டும் என முதலமைச்சர், சபாநாயகரிடம் ஆளுநர் வைத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், அரசமைப்பு சாசனம், தேசிய கீதம் அவமதிப்புக்கு துணை போக முடியாது என்பதால் மிகுந்த வருத்தத்துடன் பேரவையில் இருந்து அவர் வெளியேறியதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபை மீறுவதையே ஆளுநர் ஆர்.என்.ரவி தனது வழக்கமாக கொண்டிருக்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். நிர்வாகத் தோல்வியை மறைக்கவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவால் ஏற்பட்டுள்ள மக்களின் கோபத்தை திசைத்திருப்பவும் தமிழக அரசு, ஆளுநர் மீது பழி சுமத்துவது வாடிக்கையாகிவிட்டதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் ஆளுநரை கண்டித்து மாவட்டந்தோறும் திமுகவினர் இன்று காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்