சென்னையில் தொழிலதிபரிடம் ஒரு கோடி ரூபாய் பணம் பறிக்க முயன்ற திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திரு.வி.க. நகர் பகுதி திமுக பிரதிநிதியான சங்கர் என்பவர், கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற உதவுவதாக கூறி திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் குமார் என்பவரை சென்னைக்கு அழைத்துள்ளார். ஒரு கோடி ரூபாய் கறுப்பு பணத்துடன் அவர் சென்னை வந்த நிலையில், இருவரும் மற்றொரு நண்பர் விஜயகுமாருக்காக அண்ணாநகர் அருகே காரில் காத்திருந்தனர். அப்போது 10 பேர் கொண்ட கும்பல் குமாரை கத்தி முனையில் மிரட்டி ஒரு கோடி ரூபாயை பறிக்க முயன்றனர். அவர் கூச்சலிட்டதும் அப்பகுதி மக்கள் அனைவரையும் விரட்டியடித்தனர்.
உடனிருந்த சங்கரும் ஓட்டம் பிடித்தபோது, பொதுமக்கள் அவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 10 பேரை வைத்து குமாரிடமிருந்து பணம் பறிக்க சங்கர் திட்டமிட்டிருந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.