குன்றத்தூர் அருகே திமுக பிரமுகர் ஒட, ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குன்றத்தூரை அடுத்த கெலட்டிப்பேட்டை, காந்தி தெருவை சேர்ந்தவர் கிரிராஜன் (43). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர், சிறுகளத்தூர் ஊராட்சியில் திமுக வார்டு உறுப்பினராகவும் இருந்தார். இவருக்கு சந்தியா என்ற மனைவியும், ரியா (3) என்ற மகளும், கண்மணி என்ற 11 மாத குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் இன்று மதியம் நந்தம்பாக்கம், கருமாரி அம்மன் நகர் அருகே கிரிராஜன் வெட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த தகவல் பரவியதும், அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். பின்னர் குன்றத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் சார்லஸ், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் :
கிரிராஜன் மனைவியின் தம்பி அதே பகுதியை சேர்ந்த பாபு என்பவரின் மகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு கிரிராஜன் அடைக்கலம் கொடுத்து வைத்திருந்தார். இதையடுத்து பாபுவிடம் சென்று இருவருக்கும் முறைப்படி திருமணம் செய்து வைத்து விடலாம் என்று கிரிராஜன் கேட்டுள்ளார். அதற்கு பாபு சம்மதிக்கவில்லை. அத்துடன் என் மகள் ஓடி விட்டதால், அவள் எனக்கு மகளே இல்லை என்று கூறியுள்ளார். பழிவாங்கும் நோக்கில் இருந்த பாபு, கிரிராஜனை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்.
இந்நிலையில் கிரிராஜனுக்கு போன் செய்த பாபு சமாதானம் செய்துகொள்ளலாம் எனக்கூறி, அவரை கருமாரி அம்மன் நகர் வரவைத்துள்ளார். அங்கு உள்ள மரத்தின்கீழ் நின்று இருவரும் பேசியுள்ளனர். அப்போது திடீரென பாபு மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கிரிராஜனை வெட்டியுள்ளார். அத்துடன் அங்கு நின்றுகொண்டிருந்த பாபுவின் நண்பர்கள் மூன்று பேரும் சேருந்து கிரிராஜனை வெட்டியுள்ளனர். அவர் உயிருக்கு பயந்து அங்கிருந்து ஓட, அவரை விரட்டி வெட்டி படுகொலை செய்துள்ளனர். இதையடுத்து பாபு உட்பட 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். தற்போது பாபு உள்ளிட்ட 3 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கிரிராஜன் கொலை செய்யப்பட்ட கோபத்தில் அவரது உறவினர்கள் பாபுவின் வீட்டில் இருந்த பொருட்களை தீயிட்டு கொளுத்துவிட்டனர்.