தமிழ்நாடு

சேலம்: மருத்துவ முகாமில் ஒலித்த திமுக கட்சி பிரச்சார பாடல் - சலசலப்பை ஏற்படுத்திய சம்பவம்

சங்கீதா

ஓமலூர் அருகே நடைபெற்ற தமிழ்நாடு முதல்வரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமில், திமுக கட்சி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டு திமுக பிரச்சாரம் செய்யப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள காடையாம்பட்டி வட்டார சுகாதாரத்துறை சார்பில் தமிழ்நாடு முதல்வரின், கலைஞர் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் கஞ்சநாயக்கன்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் சாதுபக்தசிங் மற்றும் அனைத்து பிரிவு மருத்துவ நிபுணர்களும் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பரிசோதனைகள் செய்தனர்.

இதில், பொது மருத்துவம், கண் மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், ரத்த பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, இ.சி.ஜி பரிசோதனை, கர்ப்பிணி பெண்கள் ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது.

மேலும், மூத்த குடிமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகள், உணவு பழக்கவழக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அதேபோல கர்ப்பிணி பெண்கள், வளரிளம் பெண்கள் ஊட்டச்சத்து உணவு சாப்பிடுவது, எந்தெந்த உணவுகள் ஊட்டச்சத்து உணவுகள் என்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கினர். இதனைத் தொடர்ந்து ஊட்டச்சத்துணவு விழிப்புணர்வு காட்சியும் வைக்கப்பட்டிருந்தது. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்துணவு பெட்டகம் வழங்கப்பட்டது. தொடர்ந்து குழந்தைகளுக்கான பிறப்பு சான்றுகள் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த அரசு மருத்துவ முகாமில் மருத்துவ அலுவலர்கள் மைக் செட் வைத்து ஏற்பாடு செய்து திமுக கட்சி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டது, அப்பகுதி மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இது அரசு மருத்துவ முகாமா அல்லது திமுக கட்சி நடத்தும் மருத்துவ முகாமா என்று கேட்கும் அளவிற்கு தொடர்ந்து திமுக கட்சி பாடல்களை ஒலிக்கவிட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.