தமிழ்நாடு

கொரோனா தொற்றுள்ளவர்களை சொந்த வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் திமுக பிரமுகர்

கொரோனா தொற்றுள்ளவர்களை சொந்த வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் திமுக பிரமுகர்

kaleelrahman

கொரோனா பாதித்தவர்களை தனது சொந்த வாகனத்தில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்க்கும் திமுக பிரமுகரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை உதவி கோரிய 40 பேரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவையன்றி மற்ற போக்குவரத்து முடங்கியுள்ளது. இந்நிலையில் மதுரவாயல் மேட்டுக்குப்பம் 147வது வார்டு திமுக பிரமுகரான எம்.ஆர்.சதீஸ் என்பவர் அந்த பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் தனது சொந்த வாகனத்தில் ஏற்றிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்து வருகிறார்.

ஒருவருக்கு கொரோனா பாதித்தால் இரத்த உறவுகளே உதவி செய்ய தயங்கும் நிலையில், கொரோனா பாதித்த பொதுமக்களை தனது சொந்த வாகனத்தில் கொண்டுசென்று மருத்துவமனையில் சேர்க்கும் திமுக பிரமுகரின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 147வது வார்டு பகுதியில் யாரேனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென்றால் என்னை தொடர்பு கொள்லாம் என பதிவிட்டுள்ளது தற்போது அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.

அதேபோல் இதுவரை சுமார் 40 பேரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்ததாக சதீஷ் தெரிவித்தார். கொரோனாவை ஒழிக்க தங்களால் முடிந்த உதவிகளை பொதுமக்களுக்கு செய்யுங்கள் என முதல்வர் ஸ்டாலின், திமுகவினருக்கு வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.