தமிழ்நாடு

எதிர்கட்சிகள் இல்லாமல் வாக்கெடுப்பு நடந்தது முரண்பாடானது: திருச்சி சிவா

எதிர்கட்சிகள் இல்லாமல் வாக்கெடுப்பு நடந்தது முரண்பாடானது: திருச்சி சிவா

webteam

சட்டப்பேரவையில் எதிர்கட்சிகள் இல்லாமல் நடந்த வாக்கெடுப்பு முரண்பாடாணது என்று திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பினை செல்லாது என அறிவிக்கக் கோரி ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து திமுக எம்பிக்கள் புகார் அளித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்புக்காக கூட்டப்பட்ட சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டது. அமளியில் ஈடுபட்டதாகக் கூறி திமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் காவலர்களால் குண்டுகட்டாகத் தூக்கி வெளியேற்றப்பட்டனர். அப்போது திமுக உறுப்பினர்கள் தாக்கப்பட்டதாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து புகார் தெரிவித்ததுடன், மெரினாவில் போராட்டத்திலும் ஈடுபட்டார். இந்தநிலையில் சட்டப்பேரவையில் நடந்த பிரச்னைகள் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களான திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து முறையிட்டனர். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, எதிர்கட்சி உறுப்பினர்கள் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பினை செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததாகத் தெரிவித்தார். எதிர்கட்சிகள் இல்லாமல் வாக்கெடுப்பு நடந்தது முரண்பாடாணது என்று குறிப்பிட்ட சிவா, சபாநாயகர் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாகவும் குற்றம்சாட்டினார்.