திமுக எம்பி கனிமொழி pt web
தமிழ்நாடு

"சதி செய்யவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை" திமுக எம்பி கனிமொழி

கரூர் துயரம் ஆறாத வடுவாக மாறிவிட்டது என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். கரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். கரூர் நெரிசல் சம்பவம் நாட்டையே உலுக்கிய துயரம் எனவும் கனிமொழி எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

PT digital Desk

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவர்களை திமுக எம்.பி கனிமொழி நேரில் சந்தித்து நலம் விசாரித்த நிலையில், மருத்துவ சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எந்தவொரு கட்சி நிகழ்ச்சி என்றாலும் கட்டுப்பாடுகள் இருக்கும்; சமீபத்தில்கூட இதே கரூரில் திமுக-வின் முப்பெரும் விழாவை மாவட்ட செயலாளர் (செந்தில் பாலாஜி) நடத்தினார். அதற்கு கட்டுப்பாடுகள் இல்லாமலா இருந்திருக்கும்?

ஆளுங்கட்சிக்கும் கட்டுப்பாடுகள் இருக்கிறது. அது யாரையும் அச்சுறுத்தவோ, இடைஞ்சல் செய்யவோ போடப்படுவதில்லை. அவர்களின் பாதுகாப்பு, மக்களின் பாதுகாப்புக்காக போடப்படுவது. சில நேரம் கூட்டம் கட்டுங்கடங்காமல் போகும்போது, அங்குள்ள அரசியல் தலைவர்களிடம் அதிகாரிகள் முன்கூட்டியே எச்சரிக்கை கொடுப்பார்கள். எந்தவொரு அரசியல் தலைவரும் அதை ஏற்பார்.

ஏனெனில் அந்த எச்சரிக்கை அவர்கள் சம்பந்தப்பட்டது மட்டுமன்றி, மக்கள் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. தவெக குழுவிற்கும் அப்படி காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் 20 பேருக்கு ஒரு காவல் அதிகாரி என்ற விகிதத்தில் பாதுகாப்பு பணி செய்யப்பட்டபோதும் இப்படி நடந்துள்ளது.

கரூர் சம்பவம் நீங்காத வடுவாக மாறிவிட்டது. இப்படியொரு துயரச் சம்பவம் நிகழ்ந்திருக்க கூடாது. இரண்டு முதலமைச்சர்கள் கொண்ட குடும்பத்திலிருந்துதான் நானும் வந்துள்ளேன். நாங்களும் எத்தனையோ நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம்; மக்களின் பாதுகாப்பே பிரதானம் என முதலில் நாம் (அரசியல் தலைவர்கள்) நினைக்க வேண்டும். பிரதமர், முதல்வர் தங்கள் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றால்கூட, அவர்களுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளன. இங்கு மக்களுடைய பாதுகாப்பு முக்கியம்.

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினரைச் சந்தித்த எம்பி கனிமொழி

நான் அரசியல் பேச விரும்பவில்லை. யார் மீது பழிபோடுவது என்றெல்லாம் நாங்கள் இல்லை. அப்படி நினைத்திருந்தால் முதல்வர் நள்ளிரவு 1 மணிக்கு இங்கு வந்திருக்க மாட்டார். எங்கள் பிரதிநிதிகள் இங்கே களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பாக இருந்திருக்க மாட்டார்கள்

இதில் சதி செய்யவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை; யார் கட்சி என்பதெல்லாம் இங்கு தேவையில்லை. தமிழ்நாட்டு மக்களை பாதுகாப்பது, முதலமைச்சரின் பொறுப்பு. அரசியல் காழ்ப்போடு, கீழ்த்தரமான விமர்சனங்களுக்கு பதில் சொல்வது சரியாக இருக்காது” எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து கரூரில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த , கிஷோர், ரமேஷ் போன்றோரின் வீட்டுக்கு சென்ற கனிமொழி தமிழக அரசின் 10 லட்ச ரூபாய்கான காசோலையை வழங்கினார்.