தமிழ்நாடு

“ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட படுகொலை” - கனிமொழி

“ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட படுகொலை” - கனிமொழி

webteam

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு எடப்பாடி அரசால் செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட படுகொலை என்பதை பிரேத பரிசோதனையின் முடிவு தெரிவிப்பதாக திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே மாதம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். 

இந்தச் துப்பாக்கிச் சூடு அடுத்த சில தினங்களுக்கு தூத்துக்குடியில் பதட்டமான சூழலை உருவாக்கியது. தமிழகம் முழுவதும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பாக, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் தடயவியல் அறிக்கை தொடர்பான தகவல்களை ராய்ட்டர் வெளியிட்டுள்ளது. அதில், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலும் துப்பாக்கிக் குண்டுகள் தலை மற்றும் மார்பில் பாய்ந்துள்ளது என தடயவியல் அறிக்கை உறுதி செய்வதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு எடப்பாடி அரசால் திட்டமிடப்பட்ட  படுகொலை என்பதை பிரேத பரிசோதனை ஆய்வு  தெரிவிப்பதாக திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். மேலும் பெரும்பாலானவர்கள் மார்பிலும், தலையிலும் பின் பகுதியிலும் சுடப்பட்டிருக்கிறார்கள் எனவும் கார்ப்பரேட்டுகளுக்காக மக்களை கொல்லும் இந்த அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.