தமிழ்நாடு

``என் பெயரை ஏன் வாசிக்கல”- உதவி பொறியாளரை மிரட்டிய திமுக எம்எல்ஏ-வால் சர்ச்சை

webteam

தன் பெயரை வாசிக்காமல் விட்ட அதிகாரியை 'வேலை காலியாகிவிடும்' என தி.மு.க. எம்.எல்.ஏ. செல்வராஜ் மிரட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் திருமுருகன்பூண்டி ரிங் ரோடு பூலுவபட்டியில் நடைபெறும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமான பணியை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் உதவி பொறியாளர் ராஜா, கலெக்டர் வினீத், மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார், உள்ளிட்டோரின் பெயரை வாசித்தார்.

அப்போது திருப்பூர் தெற்கு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. செல்வராஜ் பெயரை உதவி பொறியாளர் வாசிக்கும்போது கூறாமல் விட்டு விட்டார். மற்றவர்கள் பெயரைக்கூறினார். இதனால் ஆவேசமடைந்த எம்.எல்.ஏ, 'எப்படி என் பெயரை கூறாமல் விடலாம். புகார் தெரிவித்தால் வேலை காலியாகி விடும்' என அதிகாரியை மிரட்டினார். அதற்கு அவர் 'சாரி' என்று கூற 'மண்ணாங்கட்டி சாரி' என ஆவேசப்பட்டார்.

அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எம்.எல்.ஏ., உதவி பொறியாளரிடம் ஆவேசப்பட்ட போது அமைச்சர், ஆட்சியர் ஆகியோர் மௌனமாக அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.