மார்க்கண்டேயன் Pt web
தமிழ்நாடு

’எலும்பை உடைப்பேன்’ முதல்வர் குறித்து அவதூறு - திமுக எம்.எல்.ஏ-வை சிறையிலடைக்க உத்தரவு!!

முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை சிறையில் அடைக்க தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Premkumar S

தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து தவெக ஆட்சியை பிடித்து, அக்கட்சித் தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அதன் பின்னர் திமுக மற்றும் தவெக இடையேயான விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, திமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளே முதல்வர் விஜயை ஒருமையிலும், அவதூறு பரப்பும் வகையிலும் விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில், முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டிருந்தார். எனினும், தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்.

அனிதா ராதாகிருஷ்ணன்

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கடந்த சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் விஜய் குறித்து, எலும்புகளை உடைப்பேன் என்று மிரட்டும் தொனியிலும், அவதூறாகவும் பேசியிருந்தார். இவரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் இன்று அவர் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து, கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ மார்க்கண்டேயனிடம் எஸ்பி அலுவலகத்தில் வைத்து 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. பின்னர், மருத்துவ பரிசோதனைக்கு பின் தூத்துக்குடி நீதிமன்றத்தில் மார்க்கண்டேயன் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த நிலையில், அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி சுமதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.