ஓசி பஸ் என கூறிய திமுக எம்எல்ஏ pt
தமிழ்நாடு

தேனி | ”பெண்கள் எல்லாரும் ஓசி பஸ்ல தானே போறீங்க..” - திமுக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு!

தேனி மாவட்டத்தில் பேசிய திமுக எம்எல்ஏ மகாராஜன் ‘பெண்கள் எல்லோரும் ஓசி பஸ்ல தானே போயிட்டு இருக்கீங்க’ என்று பேசியது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

PT WEB

தேனி மாவட்டத்தில் பேசிய திமுக எம்எல்ஏ மகாராஜன், ”பெண்கள் எல்லாரும் ஓசி பஸ்ல தானே போயிட்டு இருக்கீங்க, உங்க கிராமத்திற்கும் ரோடு போட்டதும் ஓசி பஸ்ல போங்க..” என பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மகளிர் விடியல் பயணம்

ஏற்கனவே அமைச்சராக இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி பெண்களை ஓசி பஸ் என்று இழிவாகப் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏவும் பெண்களை ஓசி பஸ்ஸில் செல்லுங்கள், உங்கள் ஊருக்கு ஓசி பஸ் விட போகிறோம் என்று பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது.

பெண்கள் எல்லாரும் ஓசில தானே போறீங்க..

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே உள்ள மண்ணூத்து மலை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை ஆண்டிப்பட்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் திறந்து வைத்தார். 

மண்டபத்தை திறந்து வைத்து கூடியிருந்த கிராமமக்கள் மத்தியில் பேசிய எம்எல்ஏ மகாராஜன், நான் 2019 இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஓட்டு கேட்டு வரும்போது இந்த பகுதிகள் அனைத்தும் வறண்டு பாலைவனம் போல் காட்சி அளித்தது. இந்த மகாராஜன் பதவி ஏற்றவுடன் மழை பெய்து உங்கள் பகுதி செழிப்படைந்தது. எப்போதும் வறட்சி ஏற்படும் ஆடி மாதத்தில் ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது என்று பேசினார்.

மேலும் மகளிர் விடியல் பயணதிட்டத்தில், நான் முன்னரே கூறியது போல் பெண்கள் அனைவரும் அரசு பஸ்ஸில் ஏறி தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி என பல்வேறு பகுதிகளுக்கு ஓசியில் செல்லுங்கள். வீட்டில் உள்ள ஆண்கள் சமையல் செய்யட்டும். உங்கள் ஊருக்கு விரைவில் புதிய தார்சாலை அமைத்து அந்த வழித்தடத்தில் அரசு பஸ் விடப் போகிறோம். அதில் பெண்கள் ஓசியில் பயணம் செய்யப் போகிறீர்கள். உங்கள் ஊருக்கு பஸ் விட்ட பின், எங்கள் ஊருக்கு ஏரோபிளேன் வேணும் என்றும் ரயில் வேணும் என்றும் கேட்டு விடாதீர்கள் என்று பேசினார்.