அமைச்சர் பொன்முடி முகநூல்
தமிழ்நாடு

ஓசிப் பயணம் To ஓட்டு போட்டு கிழிச்சிட்டீங்க.. அமைச்சர் பொன்முடியைச் சுற்றும் சர்ச்சைகள்!

சர்ச்சையாக பேசுவதற்கு பெயர் போனவர் அமைச்சர் பொன்முடி. இந்த முறை மட்டுமல்ல, பல முறை அவர் மக்கள் மத்தியிலும், மேடையிலும் பேசிய பேச்சுகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகின.

PT WEB

“மூத்த அமைச்சர்களின் பேச்சுகள் என்னை தூங்கவிடாமல் செய்கின்றன” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருத்ததுடன் ஒருமுறை கூறியிருந்தார். இப்போதும் அந்த வருத்தத்தை நீட்டிக்கும் விதமாக சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார் அமைச்சர் பொன்முடி.

கடந்த 2023 ஆம்ஆண்டு, சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பொன்முடி, மகளிர் விடியல் பயணத்தை குறிப்பிட்டு, ”ஓசி பயணம்” என்றார். அப்போதே இந்தப் பேச்சு சர்ச்சையானது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள், இன்னொரு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பொன்முடி, பெண்களுக்காக அரசு செய்துள்ள நலத்திட்டங்களைக் குறிப்பிட்டுப் பேசுகையில், "நான்காயிரம் ரூபாய் குடும்ப அட்டைக்கு வாங்கினீங்களா” என்று பேசி கண்டனங்களுக்கு ஆளானார்.

அடுத்து விழுப்புரம், அருங்குறுக்கையில் மக்கள் மத்தியில் பேசிய போது, குடிநீர் பிரச்னை குறித்து ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு, பொன்முடி கூறிய பதில் சர்ச்சைக்கு வித்திட்டது. "எனக்கு அப்படியே ஓட்டுப்போட்டு கிழி கிழினு கிழிச்சிட்டீங்க. நீங்க வந்து கேக்குறீங்களா” என்றார்.

பொன்முடி

அதைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்துள்ள மணம்பூண்டியில் நியாய விலை கடையின் கட்டடத் திறப்பு விழாவின்போது, அங்கிருந்த முகையூர் ஒன்றியக் குழுத் தலைவரான பட்டியலினப் பெண்ணைக் காட்டி சாதியை குறிப்பிட்டு பேசி சர்ச்சையை உருவாக்கியிருந்தார்.

அடுத்து, 2023 மார்ச் மாதத்தில் திருக்கோவிலூரில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் பொன்முடி பேசிக்கொண்டிருந்தபோது ஒரு பெண், “எல்லாம் குறையாகத்தான் இருக்கு’’ எனக் கூறினார். அதற்கு அமைச்சர், ''நீ கொஞ்சம் வாய மூடு'' எனக் கூறினார். தொடர்ந்து அந்தப் பெண்ணோடு அவர் பேசியதும் சர்ச்சைக்குள்ளானது.

அத்துடன், “உங்க வீட்டுக்காரர் இருக்காரா” என அமைச்சர் கேட்க, அந்தப் பெண் ''அவர் எப்பயோ போயிட்டாரு'' என்று பதில் அளிக்க, “பரவால்ல.. நல்லவேள அவர் போய் சேர்ந்துட்டாரு'' என கிண்டலாகத் தெரிவித்தார்.

திருக்கோவிலூரில் அரசுப் பேருந்து நிலையத்துக்கான இடம் தேர்வு செய்ய சென்றபோது வேறு இடம் பார்க்கக் கோரிய இளைஞருடன் வாக்குவாதம் செய்த சம்பவம் கடந்த மார்ச் மாத இறுதியில் நடந்தது. இறுதியில் அந்த இளைஞர் கூறியது சரியானதாக இருந்ததால் வேறு இடம் பார்க்குமாறு கூறியிருந்தார் பொன்முடி.

இந்த நிலையில், விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அவர் பெண்கள் குறித்தும், சைவம், வைணவத்தை அவமதிக்கும் வகையில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைத் தொடர்ந்து அவருக்கு எதிராகக் கண்டங்கள் குவிந்து வருகின்றன. மக்களவை உறுப்பினர் கனிமொழியே இதுகுறித்து கண்டித்துள்ளார்.