சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்' பதவியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரில் யாரை அந்தப் பதவியில் அமர்த்துவது என அவர்களது ஆதரவாளர்களிடையே கடும்போட்டி ஏற்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திமுகவின் தோல்வி குறித்து 36 பேர்கொண்ட குழு நடத்திய கள ஆய்வு அறிக்கை, வரும் 5ஆம் தேதி அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அளிக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் கட்சி நிர்வாக அமைப்பில் பெரிய மாற்றங்கள் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. இதனிடையே, திருவள்ளூர் மாவட்ட திமுக நிர்வாகிகள், கனிமொழியை செயல் தலைவராக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மண்டலப் பொறுப்பாளராக தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் அதிக வெற்றிகளைப் பெற்றுத் தந்தது, காங்கிரஸுடன் பேசி கூட்டணியைச் சீரமைத்தது போன்ற காரணங்களால், கனிமொழிக்கு மகளிர் அணியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மறுபுறம், அண்ணா அறிவாலயத்தில் நடந்த இளைஞரணி கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலினை செயல் தலைவராக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இளைஞர்கள், மகளிர்க்கு தேர்தலில் போதிய வாய்ப்பு தராததால், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக அவர்கள் தவெகவுக்கு தாவக்கூடும் என்ற அச்சமும் திமுகவில் எழுந்துள்ளது.
இதனால் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி வழங்கி, இளைஞர்களை தக்கவைக்க முயற்சிக்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்படுகிறது. 2017இல் கருணாநிதி உடல்நலம் குன்றியபோது மு.க.ஸ்டாலினுக்காக உருவாக்கப்பட்ட இந்தச் செயல் தலைவர் பதவி, மீண்டும் உருவாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், அவர் கனிமொழியைத் தொடர்ந்து சந்தித்து வருவதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.