பொ.மல்லாபுரம் பேரூராட்சி பகுதிகளில் திமுக தொண்டர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக 8, பாமக 3, விசிக 2 இடங்களில் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் பொ.மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் பதவியை, திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு திமுக தலைமை ஒதுக்கியது. இதனையடுத்து விசிக சார்பில் 4-வது வார்டில் வெற்றி பெற்ற சின்னவேடி முன் நிறுத்தப்பட்டார்.
ஆனால் 13-வது வார்டு பகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சாந்தி புஷ்பராஜ், போட்டியாக நின்று, ரகசிய வாக்கெடுப்பு மூலம் 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதை கண்டித்து கவுன்சிலர் சின்னவேடி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திமுக தலைமை பேரூராட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய சாந்தி புஷ்பராஜை வலியுறுத்தியது. ஆனால் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என சாந்தி புஷ்பராஜ் மறுத்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று திமுக தொண்டர்கள் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பை மீறி திமுகவுக்கு தான் நாங்கள் வாக்களித்தோம். அதனால் திமுக தலைமை தான் எங்களுக்கு வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை திமுக சார்பில் பொ. மல்லாபுரம் ஊர் பொதுமக்கள் என்ற பெயரில் பொம்மிடி பேருந்து நிலையம் ரயில் நிலையம் மேம்பாலம் முக்கிய கடை வீதிகளில் ஒட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து பொ.மல்லாபுரம் பேரூராட்சி பகுதியில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.