திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
சென்னை கோபாலபுரம் கருணாநிதி இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “பெரிய முதலீடுகளை ஈர்க்க முடியாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் பல கோடி ரூபாய் கொள்ளை நடைபெற்றுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விவசாயிகள் வஞ்சிப்பு, வேலைவாய்ப்பு இல்லை. மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதே எனது முதல் பணி.
‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் அடுத்த கட்ட பிரசாரம் தொடங்க திட்டமிட்டுள்ளோம். வரும் 29 ஆம் தேதி முதல் திருவண்ணாமலையில் இருந்து புதிய தேர்தல் பரப்புரையை தொடங்குகிறேன். மக்களிடம் தரப்படும் படிவத்தில் பிரச்னைகளை எழுதித்தந்தால் திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் போர்க்கால அடிப்படையில் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். சொன்னதை செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம். மேலும், www.stalinani.com என்ற இணையதளம் மூலமோ, 91710 91710 என்ற எண்ணிலோ புகார் அளிக்கலாம்” எனத் தெரிவித்தார்.