சிவாஜி கிருஷ்ணமூர்த்தி Pt web
தமிழ்நாடு

திமுக பேச்சாளர்.. சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை.!

திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் 3 மாதம் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Premkumar S

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, திமுக பொதுக்கூட்டங்களில் ஆபாசமாக பேசியதற்காக 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார். எழும்பூர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியதுடன், அவருக்கு 20,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. மேல்முறையீடு செய்ய 1 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

திமுக பேச்சாளாரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் எதிர்க்கட்சிகளை ஆபாசமான வார்த்தைகளால் திமுக பொதுக்கூட்டங்களில் பேசுவதன் மூலம் பரவலாக அறியப்பட்டவர். இவர், கடந்த 2023ஆம் ஆண்டு கொடுங்கையூரில் நடந்த திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோரை ஆபாசமான வார்த்தைகளில் விமர்சித்திருந்தார்.

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி-குஷ்பு

இந்த நிலையில், அவர் மீது கொடுங்கையூர் காவல்நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் செயல்பாடு காரணமாக அவரை கட்சியில் இருந்து நீக்கி திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு கட்சி தலைமையிடன் மன்னிப்புகோரியாதாக கூறி மீண்டும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

3 ஆண்டு சிறை..

இந்தசூழலில் அடுத்தடுத்த பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற அவர், மீண்டும் ஆபாசமாக பேசிவருவதாக விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையில் தான், 2023ஆம் ஆண்டு குஷ்பு மற்றும் ஆர்.என்.ரவியை ஆபாசமாக பேசியதற்கான வழக்கு நீண்டகாலமாக எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்தநிலையில் இன்று, எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி ரேவதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் மற்றும் 3 மாதம் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 1 மாத காலம் அவகாசம் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டுள்ளது.