முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலின் மிசாவில் கைதானது குறித்து முதல்வர் விஜய் பேசியதற்கும், அவருடைய சைகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அப்படி சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, முதலமைச்சர் விஜயை ஒருமையில் பேசியதோடு, அமைச்சர் நிர்மல் குமார் குறித்து தரக்குறைவான வகையில் விமர்சனம் செய்தார்.
இதையடுத்து, ஆ. ராசாவின் பேச்சுக்கு அரசியல்கட்சித் தலைவர்கள் பலரும் கடுமையான கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். திமுகவைச் சேர்ந்த எம். பி. கனிமொழி,
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
என்ற திருக்குறளை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
திமுகவினர் சிலர் பெண்களை கொச்சைப்படுத்துவதை சகிக்க முடியவில்லை எனவும் பொதுவெளியில் பெண்களை இழிவுபடுத்தி பேசுவோரை திமுக தலைமை கண்டித்து ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, கடமை,கண்ணியம், கட்டுப்பாடு முழக்கத்தை முன் வைத்த திமுக, இப்போது வன்மம், வெறுப்பு மற்றும் ஆற்றாமையால் நிரம்பிக்கொண்டு இருக்கிறதோ என அய்யம் எழுகிறது என அமைச்சர் வன்னி அரசு கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இவ்வாறு, ஆ. ராசாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், என் வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதில், எனக்கு தயக்கமில்லை எனத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்தான பதில், ”தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் ‘அடையாளத்தை’ - உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான்; என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத்தயக்கமில்லை. நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.