தமிழ்நாடு

“கலைஞரும் நானும்.. நானும் உதயநிதியும்..” - மு.க.ஸ்டாலின் எதிர்பார்ப்பு

“கலைஞரும் நானும்.. நானும் உதயநிதியும்..” - மு.க.ஸ்டாலின் எதிர்பார்ப்பு

webteam

மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியிடம் தான் வாங்கிய பெயரை தன்னிடம் உதயநிதி வாங்குவார் என எதிர்பார்ப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணியில் அதிக உறுப்பினர்களை சேர்த்த நிர்வாகிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மா.சுப்ரமணியன் உள்ளிட்ட  எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “1980ஆம் ஆண்டு மதுரை ஜான்சி ராணி பூங்காவில் திமுக இளைஞரணி தொடங்கப்பட்டது. அப்போது 7 நிர்வாகிகளில் ஒருவராக இளைஞரணியில் பணியை தொடங்கினேன். நான் கலைஞரின் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றிவிட்டேன் என்றெல்லாம் சொல்லமாட்டேன். 

நன்றாக உழைப்பேன் என்ற பெயரை கலைஞரிடத்தில் வாங்கியிருக்கிறேன். நான் கலைஞரிடம் வாங்கிய பெயரை உதயநிதி என்னிடம் வாங்குவார் என எதிர்பார்க்கிறேன். இளைஞரணியில் விரைவில் 50 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பார்கள் என நம்புகிறேன். உதயநிதி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தமிழகம் முழுவதும் இன்னும் ஏராளமான உறுப்பினர்கள் சேர்க்கப்பட இந்த நிகழ்ச்சி காரணமாக இருக்கும்” என்றார். 

உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, “என் வாழ்நாளில் இது மறக்க முடியாத விழா. எத்தனையோ விழாக்களில் பங்கேற்றிருந்தாலும் கலைஞர் சிலை திறப்பிற்கு பிறகு, இது எனக்கு முக்கிய விழா. இளைஞரணிக்கு 30 லட்சம் உறுப்பினர்களை எப்படி சேர்ப்பீர்கள் என்று கேட்டார்கள். தமிழகம் முழுதும் சென்று இளைஞர்களை சேர்த்தோம். சாரை சாரையாக இளைஞர்கள் சேர்ந்தார்கள். மா.சுப்ரமணியன் மட்டுமே 1 லட்சத்து 20 ஆயிரம் பேரை சேர்த்திருக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் வென்று திமுக தலைவரை ஆட்சியில் அமரச் செய்வோம்” என்றார்.