தமிழ்நாடு

கீழடியில் நின்றபோது சந்திரயானைப் போல மனம் பறந்தது - மு.க.ஸ்டாலின்

webteam

கீழடியில் நின்றிருந்தேன்,மனதோ சந்திரயானைப் போல வான்வரை பறந்து உயர்ந்து சென்றது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி மூலம், சங்க கால நாகரிகத்திற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளிலேயே மிகப்பெரியது கீழடி அகழாய்வுதான். சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரிகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழ்வாராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளன. 

இங்கு கிடைக்கப்பெற்ற பொருட்கள் உலகப் புகழ்பெற்ற அறிவியல் கூடங்களில் ஆய்வு செய்யப்படுகின்றன. கி.மு. 6ஆம் நூற்றாண்டில் சங்க காலச் சமூகம் எழுத்தறிவு பெற்று இருந்ததற்கான சான்றுகளாக ஆதன், குவிரன் போன்ற ஆட்பெயர்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டது கீழடியை உலகளவில் உயர செய்துள்ளது.

இந்நிலையில் கீழடி பகுதியைச் சென்று பார்வையிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் அது குறித்து பேசியுள்ளார். தான் கீழடியில் நின்ற போது தன் மனம் சந்திரயானைப் போல வான்வரை பறந்து உயர்ந்து சென்றது என தெரிவித்தார். மேலும், தமிழர்கள் பல பகுதிகளில் சிறந்த நாகரிகம், பண்பாட்டை கடைப்பிடித்து முன்னோடியாக விளங்கியவர்கள். தமிழர்களின் பண்பாட்டு பெருமைகளை மீட்பது மட்டுமல்ல, அதனை பாதுகாப்பதும் கடமையாகும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.