வெங்காய விலையை குறைப்பதற்காக திமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவார்கள் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒருகிலோ சின்ன வெங்காயம் 140 ரூபாயை வரை விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. திருச்சி வெங்காய மண்டியில் சிறிய வெங்காயம் கிலோ 130 ரூபாய் வரை விற்கபடுகிறது. பெரிய வெங்காயம் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை காய்கறி சந்தையில் ஒருகிலோ சின்ன வெங்காயம் 140 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. உள்ளூர் விளைச்சல் காரணமாக கோவை சந்தையில் மட்டும் வெங்காயத்தின் விலை மற்ற நகரங்களைவிட சற்று குறைவாக உள்ளது. அங்கு சின்ன வெங்காயம் கிலோ 85 ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் கிலோ 74 ரூபாய்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
இந்நிலையில் வெங்காய விலை தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், “வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகமாகிறது ! அரசு வெங்காயத்தின் அவசியத் தேவையை உணர்ந்து விலையை கட்டுக்குள் வைக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், இதனை நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவார்கள் !” என்று தெரிவித்துள்ளார்.