அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சமமான சிந்தனையுடனும், மதநல்லிணக்கத்துடனும் முன்னெடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அயோத்தி நிலபரப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பில் 2.77 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டதோடு, அயோத்தியில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் மத்திய, உத்தரப் பிரதேச மாநில அரசுகள் 5 ஏக்கர் இடத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் 2.77 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்டுவதற்கான அமைப்பை 3 மாதத்திற்குள் ஏற்படுத்த வேண்டும் என்றும், நிலத்தை மத்திய அரசே நிர்வகிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள கருத்தில், “அயோத்தி தீர்ப்பை அனைத்து தரப்பினரும் சமமான சிந்தனையுடனும், மதநல்லிணக்கத்துடனும் முன்னெடுக்க வேண்டும். நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்த பிரச்னைக்கு உச்சநீதிமன்றம் ஒரு தீர்வை தந்திருக்கிறது. தீர்ப்பை எந்த விதமான விருப்பு, வெறுப்புக்கும் உட்படுத்தாமல் அனைவரும் சமமான மனநிலையுடன் ஏற்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.