தமிழ்நாடு

கருணாநிதி விரைவில் மீண்டு வருவார்: தொண்டர்கள் நம்பிக்கை

Rasus

கருணாநிதி விரைவில் மீண்டு வருவார் என காவேரி மருத்துவமனை வெளியே நீண்ட நேரமாக காத்திருக்கும் தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியின் உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனை சென்று விசாரித்து செல்கின்றனர். கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தொண்டர்களும் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால், நேற்று காலை முதலே திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சற்றே பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

நேற்று மாலை 6.30 மணியளவில் கருணாநிதியின் உடல்நிலைக் குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், உறுப்புகளை ஒத்துழைக்க வைப்பதில் சவால் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கை திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து காவேரி மருத்துவமனை வெளியே தொண்டர்கள் குவியத் தொடங்கினர். தொண்டர்களை கட்டுப்படுத்த போலீசாரும் தங்களது பாதுகாப்பை பலப்படுத்தினர். ஆனாலும் தொண்டர்கள் இரவு முழுக்க காவேரி மருத்துவமனை வெளியே காத்திருந்து ‘ எழுந்து வா தலைவா’ என முழக்கமிட்டனர். தொடர்ந்து இன்று காலையும் ஏராளமான தொண்டர்கள் காவேரி மருத்துவமனை வெளியே காத்துள்ளனர். அவர்கள் கூறும்போது, திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம்பெற்று மீண்டும் வருவார் என நம்பிக்கை தெரிவித்தனர்.