தமிழ்நாடு

மெரினாவில் கருணாநிதிக்கு இடம் : நீதிமன்றத்தை நாட திமுக முடிவு

மெரினாவில் கருணாநிதிக்கு இடம் : நீதிமன்றத்தை நாட திமுக முடிவு

webteam

சென்னை மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்க செய்வது தொடர்பாக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய இடம் மறுக்கப்பட்டதை எதிர்த்து காவேரி மருத்துவமனை வளாகத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவேரி மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு உயிரிழந்தார். கருணாநிதி மறைவை அடுத்து அவரது உடலை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கை அடங்கிய மனுவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் திமுக தலைவர்கள் கொடுத்தனர். 

ஆனால், வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், சட்ட சிக்கல்கள் உள்ளதாலும் மெரினாவில் கருணாநிதிக்கு இடம் அளிக்க இயலாது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்ததை அடுத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தினார். 

இந்நிலையில், மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்க செய்வது தொடர்பாக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.