என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கறுப்பு நாள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை அளித்து வந்தனர். அவரது உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்து சென்றனர். அவரது உடல்நிலையில் நேற்று முதல் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் காவேரி மருத்துவமனை முன்பு ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்தனர். இன்று மாலை காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை, திமுக தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. அத்துடன் காவேரி மருத்துவமனை முன்பாக திமுக தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.
காவேரி மருத்துவமனை மற்றும் கோபாலபுரம் இல்லம் என அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் காவல்துறையினரை பாதுகாப்பு பணிகளை பலப்படுத்துமாறு டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார். தமிழகம் முழுவதும் பரபரப்பு தொத்திக்கொண்டது. இந்நிலையில் காவேரி மருத்துவமனையில் இருந்து வெளியிடப்பட்ட 8வது அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதி மாலை 6.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இது தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், “என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கறுப்பு நாள். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.