மறைந்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உடல் சென்னை அயனாவரம் வேலங்காடு மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் அன்பழகனின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். திமுக எம்பி கனிமொழி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதேபோல் நடிகர் சத்யராஜூம் நேரில் அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, அந்த கட்சி எம்பிக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி, டி.கே.ரங்கராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் அன்பழகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து அவரது உடல் கீழ்ப்பாக்கத்திலுள்ள அவரது வீட்டிலிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வேலங்காடு மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இறுதி அஞ்சலியின்போது, துரைமுருகன் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினர்.