தமிழ்நாடு

தேசிய அளவில் 3ஆவது இடத்தை பிடித்தது திமுக !

தேசிய அளவில் 3ஆவது இடத்தை பிடித்தது திமுக !

webteam

மக்களவை தேர்தலில் 43.86 சதவிகித வாக்குகளை பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிக மக்களவை உறுப்பினர்களை கொண்ட கட்சிகளின் பட்டியலில் திமுக தேசிய அளவில் மூன்றாமிடத்தை பிடித்துள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்த மக்களவைத் தேர்தலில், பெரும்பாலான இடங்களில்‌ திமுக அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது.  திமுக கூட்டணி 38 இடங்களிலும், அதிமுக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. திமுகவின் இந்த வெற்றியின் மூலம் தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

தமிழகத்தி‌ல் திமுக கூட்டணியில், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் அவரவர் தனி சின்னத்திலும், மதிமுக, ஐ.ஜே.கே,  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போன்ற கட்சிகள் திமுகவின் “உதய சூரியன்” சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 மக்களவை தொகுதியில் திமுகவின் சொந்த சின்னமான உதய சூரியன் சின்னத்தில் 23 தொகுதியில் களம் கண்டு வெற்றி பெற்றுள்ளது. இந்த மாபெரும் வெற்றி மூலம் திமுக தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. 


நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில்,தேசிய அளவில் 303 இடங்களில் “தாமரை” சின்னத்தில் வெற்றி பெற்று பாஜக முதலிடத்தையும், 52 இடங்களில் “கை” சின்னத்தில் வெற்றி பெற்று காங்கிரஸ் இரண்டாவது இடத்தையும், 23 இடங்களில் “உதய சூரியன்” சின்னத்தில் வெற்றி பெற்று திமுக மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் அடுத்த படியாக 22 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் தமிழகத்தில் “உதய சூரியன்” சின்னத்தில் போட்டியிட்ட வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.