ஸ்டாலின் - மோடி web
தமிழ்நாடு

கைகழுவிய கூட்டணிக் கட்சிகள்.. பாஜக உடன் கைகோர்க்கிறதா திமுக? டெல்லியின் மெகா வியூகம்?

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என முக்கிய கூட்டணி கட்சிகள் நழுவியிருக்கும் சூழலில், தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் தனித்துவிடப்பட்டுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

Rishan Vengai

தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் தவெக ஆட்சியால் திமுக, அதிமுக இரண்டும் பின்னடைவு கண்ட நிலையில், திமுக கூட்டணிக் கட்சிகள் தவெக அமைச்சரவையில் இணைந்து 10 ஆண்டுக்கும் மேலான கூட்டணியை முறித்துள்ளன. இதனால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள திமுகவை, பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்க முயல்கிறது என்ற தகவல் எழுந்துள்ளது. ஆனால் பாஜக எதிர்ப்பு அரசியலை முன்னிறுத்தும் திமுக, இதை ஏற்குமா என்பது கேள்வியாக உள்ளது.

திமுக, அதிமுக என்ற இருபெரும் திராவிடக் கட்சிகளை ஓரங்கட்டி விஜய் தலைமையிலான தவெக ஆட்சியைப் பிடித்ததிலிருந்து தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாக மாறிக்கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் தமிழகத்தில் வளர்ச்சியை கண்டுவந்த தேசிய கட்சியான பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மறுபக்கம் அதிமுக கிட்டத்தட்ட இரண்டாக பிளவுபட்டிருக்கிறது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, ஆளுங்கட்சியாக இருந்த திமுக தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைவிட, தங்களுடைய கட்சித் தலைவரின் தோல்வியால் கிட்டத்தட்ட பலத்தை இழந்துள்ளது. தேர்தலில் எப்படி தோற்றோம், தலைவரை எப்படி சொந்த தொகுதியில் தோற்கடிக்க அனுமதித்தோம் என்ற பேரதிர்ச்சியிலிருந்து திமுக இன்னும் மீண்டுவரமுடியாமல் இருந்துவருகிறது.

திமுக - அதிமுக

இப்படியான சூழலில்தான் திமுகவின் பிரதான கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிகள் தவெகவை ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்த கையோடு, தவெகவின் அமைச்சரவையிலும் தங்களை இணைத்துக்கொண்டுள்ளன. இது மாபெரும் தோல்வியால் துவண்டு போயிருக்கும் திமுகவிற்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தான் தமிழக அரசியல் களமே தலைகீழாக திரும்பியிருக்கும் நேரத்தில், தனித்து விடப்பட்டிருக்கும் திமுக, பாஜக உடன் கைகோர்க்கவிருப்பதாக தகவல் பரவிவருகிறது.

தோல்வியடைந்த திமுக-அதிமுக கூட்டணி பேச்சு!

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக தமிழகத்தை மாறிமாறி ஆட்சிசெய்த திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி 3வது கட்சியாக தவெக தனிபெருங்கட்சியாக உருவெடுத்தது. இந்தச் சூழலில் தவெக ஆட்சியமைப்பதை விரும்பாத திமுக, அதிமுக கட்சிகள் கடைசி நேரத்தில் கூட்டணி வைக்கும் பேச்சுவார்த்தையை நடத்தியதாகத் தகவல் வெளியானது. இந்த பேச்சை இரு கட்சிகளுமே தொடங்கியதாகவும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகவும் இருக்க முன்மொழியப்பட்டதாகவும் முதலில் தகவல் வெளியானது. இந்த பேச்சுவார்த்தைக்கு டெல்லி பாஜக மேலிடமும் பச்சைக் கொடி காட்டியதாகவும் சொல்லப்பட்டது.

Stalin, EPS, Thirumavalavan

ஆனால் இந்த முடிவால் அதிமுகவிற்குள் உட்கட்சி பூசல் ஏற்பட்டதால், கடைசியில் திமுக, அதிமுக ஆதரவோடு விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக முன்மொழிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அடுத்தடுத்து செய்திகள் வெளியாகின. இதனால் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டியது பெரிய இழுபறியாகவே இருந்தது.

இந்த அத்தனை பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடியவே விஜய் தலைமையிலான தவெக, காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இடதுசாரிகள் போன்ற திமுகவின் கூட்டணி கட்சிகளின் ஆதரவால் ஆட்சியமைத்துள்ளது.

திமுக-பாஜக கூட்டணி..?

இந்தசூழலில்தான் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்த திமுக கூட்டணிக் கட்சிகள் தற்போது தவெக அமைச்சரவையில் அங்கம் வகித்து 10 ஆண்டுகளுக்கு மேலான கூட்டணியின் முறிவை உறுதிசெய்துவிட்டன. இதனால் தமிழகத்தில் திமுக தனித்துவிடப்பட்டுள்ள நிலையில், தற்போது பாஜக திமுகவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தவெக உடன் இணைந்துள்ளதால், இந்தச் சூழலை பயன்படுத்தி திமுக உடன் பாஜக பேச்சுவார்த்தையை தொடர்ந்துவருவதாகச் சொல்லப்படுகிறது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு மடங்கு பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக நினைப்பதாகவும், அதற்கு திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் சொல்லப்படுகிறது. திமுகவிடம் 22 மக்களவை உறுப்பினர்களும், 8 மாநிலங்களவை உறுப்பினர்களும் இருக்கின்றனர்.

முக ஸ்டாலின் - பிரதமர் மோடி

சமீபத்தில், நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பாஜகவால் நிரூபிக்க முடியாமல் போனது.

ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுவரையறை மற்றும் நீதித்துறை சீர்திருத்தங்கள் போன்ற முக்கிய வரலாற்று முடிவுகளை எவ்வித அரசியலமைப்புத் தடைகளும் இன்றி நிறைவேற்றுவதற்கு, அரசாங்கத்திற்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அதனால் திமுகவின் ஆதரவு கிடைத்தால் பாஜகவிற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை என்ற இலக்கை அடைவது மிகவும் எளிதானதாக மாறும் என சொல்லப்படுகிறது.

திமுக இணையுமா.?

பாஜகவின் சனாதன அரசியலை தொடர்ந்து எதிர்த்துவரும் திராவிட முன்னேற்ற கழகம் பாஜக உடன் கைகோர்ப்பது எளிதான காரியமாக இருக்காதுதான் என்றாலும், திமுகவின் ஆதரவைப் பெறுவதற்கான ஒரு தனித் திட்டம் பாஜக தரப்பில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

மோடி, ஸ்டாலின்

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சிகளைப் போலவே, திமுகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிக்கக்கூடும் என்று மோடி அரசின் வியூகவாதிகள் நம்புவதாக சொல்லப்படுகிறது. முன்னதாக, அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் திமுக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்துள்ளது என்பதால் திமுகவின் ஆதரவை பெறுவதை பாஜக தொடர்ந்து முயற்சித்து வருவதாக சொல்லப்படுகிறது.