L. Murugan
L. Murugan File Photo
தமிழ்நாடு

”கூவம் பழைய நிலைக்கு தூய்மையாக மாறனும்னா அது பிரதமர் மோடியால்தான் முடியும்” - எல்.முருகன் பேச்சு!

PT WEB

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா கருத்தரங்கு சென்னை தி.நகரில் உள்ள பி.டி.தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன் மற்றும் வி.பி.துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய எல்.முருகன், “அண்ணல் அம்பேத்கர் உலக தலைவர். அவர் பொருளாதார நிபுணரும் கூட . அவர் நீர் மேலாண்மையில் மிகுந்த அறிவு கொண்டிருந்தவர். அதேபோல தற்சார்பு பொருளாதாரத்தின் மீதும் மிகுந்த அறிவுடன் செயல்பட்டார். அவரின் வழியில்தான் தற்போது பிரதமர் மோடி மேக்கிங் இந்தியா திட்டத்தையே கொண்டு வந்துள்ளார். நேரு காலத்தில் அண்ணல் அம்பேத்கர் அமைச்சர் அவையில் புறக்கணிக்கப்பட்டார். அதனால்தான் அவர் ராஜினாமா செய்தார் என்பது வரலாற்று பதிவு. அதைத்தான் இசைஞானி இளையராஜா வெளியிட்ட அம்பேத்கரும் மோடியும் நூல் தெரிவிக்கிறது.

அதேபோல் வாஜ்பாய் காலத்தில்தான் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு 'பாரத ரத்னா' வழங்கப்பட்டது. அவர் வாழ்ந்த லண்டன் வீடு, டெல்லி வீடு மற்றும் அவர் பிறந்த மத்தியப்பிரதேசத்தில் உள்ள வீடு என 5 வீடுகளும் தேசிய மயமாக்கப்பட்டு புனித தலம் போல மாற்றபட்டது பிரதமர் மோடியின் ஆட்சியில்தான்.

2047-இல் 100-வது சுதந்திர தினத்தில் இந்தியா முன்னேறிய நாடாக இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் மோடி தலைமையில் செயல்பட்டு வருகிறோம். 'சென்னை கூவத்தை சுத்தம் செய்வேம்; சிங்கார சென்னையாக மாற்றுவோம்' என 20 ஆண்டுகளாக திமுக தெரிவித்து வருகின்றனர். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. கூவம் பழைய நிலைக்கு தூய்மையாக மாற வேண்டும் என்றால் அது பிரதமர் நரேந்திர மோடியால்தான் முடியும்.

சேலம் பகுதியில் பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர் குடியரசு தினத்தில் கொடியேற்ற முடியவில்லை. வேங்கை வயலில் குடிநீரில் மலத்தை கலந்தவர்கள் கைது செய்யப்படவில்லை. இதுதான் போலி சமூக நீதி. வேங்கை வயல் சம்பவத்தில் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என திருமாவளவன் அறிவாலயத்தின் முன்பு போய் கேட்க முடியுமா? திருமாவளவன் அரசியல் காரணங்களுக்காக அமைதியாக இருக்கிறார்.

அதேபோல மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், சி.வி கணேசன் உள்ளிட்ட திமுகவில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அமைச்சர்கள் அமைச்சரவையில் கடைசியில் உள்ளனர். ஏன் அவர்களால் பொதுப்பணித்துறை உள்ளிட்ட பெரிய துறைகளை கையாள முடியாதா? இதுதான் போலி சமூக நீதி'' என தெரிவித்திருக்கிறார்.