தமிழ்நாடு

அடுத்த பொதுச்செயலாளர் யார்? - மார்ச் 29ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்

அடுத்த பொதுச்செயலாளர் யார்? - மார்ச் 29ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்

webteam

அடுத்த பொதுச்செயலாளரை தேர்வு செய்ய திமுக பொதுக்குழு கூட்டம் மார்ச் 29ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

முதுபெரும் அரசியல் தலைவரும் திமுக பொதுச் செயலாளருமான க.அன்பழகன் கடந்த வாரம் (98) காலமானார். அவரது மறைவிற்கு திமுகவினர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் அன்பழகனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வேலங்காடு மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

அதனையடுத்து திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கத்தில் க.அன்பழகனின் படத்திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளராக 43 ஆண்டு காலம் கலைஞருக்கு துணையாக இருந்தவர் பேராசிரியர் அன்பழகன். அவரின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு இழப்பு. எனக்கு தொடர்ந்து தோள் கொடுத்தவர் பேராசிரியர்” எனப் பேசினார்.

இந்நிலையில், பொதுச்செயலாளரை தேர்வு செய்ய திமுக பொதுக்குழு கூட்டம் மார்ச் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.