தமிழ்நாடு

திமுக தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது பொதுக்குழு

திமுக தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது பொதுக்குழு

webteam

திமுக பொதுக்குழுக் கூட்டம் வருகிற 28ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்குப் பிறகு, கடந்த 14ஆம் தேதி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், க.அன்பழகன், துரைமுருகன், கனிமொழி, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அத்துடன் திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். இந்தச் செயற்குழுக் கூட்டத்திற்குப் பிறகு திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டி தேர்வு செய்யப்படுவார்? என்ற தகவல்கள் கசிந்தன. ஆனால் தலைவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பொதுக்குழுவிற்கே உள்ளது. இதனால் விரைவில்  பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் திமுக பொதுக்குழுக்கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், பொதுக்குழுக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தின் போது, தணிக்கைக்குழு அறிக்கை, தலைவர் மற்றும் பொருளாளர் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்டாலின் போட்டி இன்றி தலைவராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.