தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தீர்மானம் குறித்து பேசும் போது முதல்வர் விஜய் ஸ்டாலின் மற்றும் திமுக மீது கூறிய குட்டிக்கதை, கேலிச் சொற்கள் குறித்து முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்டாண்ட்-அப் காமெடியன் போல் உளறினார், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மட்டுமே கூறினார், சட்டமன்ற மாண்பை குலைத்தார் என்று அவர் குற்றம்சாட்டுகிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பாக உரையாற்றிய முதல்வர் விஜய், குட்டிக்கதை ஒன்றை கூறி திமுக தலைவர் ஸ்டாலின் குறித்தும், அவரது கொளத்தூர் தொகுதி தோல்வி குறித்தும் விமர்சித்திருந்தார். அவருடைய பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வரும்நிலையில், முன்னாள் திமுக அமைச்சர் கீதா ஜீவனும் விமர்சித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் கீதா ஜீவன், “ஆளுநரின் உரைமீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்களின்பேச்சு ஆணவத்தின் உச்சம்.. அதிகாரத் திமிரின் வெளிப்பாடு!
முன்னதாக பேசிய எதிர்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழக வெற்றிக் கழக அரசின்மீதான ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்தார். மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - சீரழிந்துவரும் சட்டம் ஒழுங்கு என நியாயமான கேள்விகளை எழுப்பினார். பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட தவெகவினரைக்கூட ஆதாரங்களுடன் குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழ்நாடு முதல்வர் பதிலளிப்பார் என்றே எதிர்பார்த்தோம்.
ஆனால், முதல்வருக்கான மாண்புகளை மறந்து ஸ்டாண்ட்-அப் காமெடியன்போல உளறிக் கொட்டியிருக்கிறார் முதல்வர் விஜய். பதிலுரை முழுக்கவே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் பிதற்றல்களுமே நிறைந்திருந்தன. ஒரே மாதத்தில் 150 பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை, என சட்டம் ஒழுங்கு சீரழிவு, மின்சாரத்துறை செயலழிப்பு, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டற்றவர்களுக்கு பதில்சொல்ல வக்கற்ற முதல்வர் சார் திமுக மீது அவதூறை அள்ளித் தெளித்திருக்கிறார். பாஜகவுடன் இணக்கமாக இருப்போம் எனக் கூறிவிட்டு திமுக குறிவைத்து தாக்குவதிலேயே நீங்கள் யார் என்பது அம்பலப்பட்டுவிட்டது.
முதல்வர் விஜய் அவர்களே.. இந்த வெற்றுக் வாய்சவுடால்களுக்கு அஞ்சும் இயக்கம் அல்ல திராவிட முன்னேற்ற கழகம் .
எனவே உங்கள் வசனங்களை சினிமா ஷூட்டிங்கோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.
அதிலும் எங்கள் தலைவர் குறித்து முதல்வர் விஜய் பேசியது நடித்திருப்பது ஆணவத்தின் உச்சம்.. அதிகாரத் திமிரின் வெளிப்பாடு. 50 ஆண்டுகளுக்கு மேல் பொது வாழ்க்கையில் உள்ள தளபதியார் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை முறை மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளையும் அறிந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வழியிலே தமிழ்நாட்டை வளர்ச்சி அடைய செய்தவர் எங்கள் தலைவர்.1 1/2 கோடி தொண்டர்களை கொண்ட திமுகவின் தலைவர். தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி வரக்கூடாது என்பதற்காகத்தான் அன்று கூட்டணி கட்சிகளை தவெவிற்கு ஆதரவு தரக்கூறினார் என்பதை அனைவரும் அறிவர். தளபதியாரை குறித்து இவ்வளவு ஏளனமாக தனி நபர் விமர்சனம், கேலிப்பேச்சு ..
சபையில் இல்லாதவரை குறித்து, இதுவரை சட்டமன்றத்தில் இவ்வளவு அநாகரிகமாக பேசப்பட்டதில்லை. எல்லாவற்றுக்கும் மக்கள் பதில் தருவார்கள்.
கழகத் தலைவர் தளபதியாரைப் பற்றி முதலமைச்சரின் தரம் தாழ்ந்த பேச்சு மற்றும் திமுகவின் மீது அவருடைய பொய்க்குற்றச்சாட்டுகள் அனைத்தும் கண்டனத்துக்குரியது. மாண்பையும் மரபையும் கட்டிக் காக்க வேண்டும் என்ற எங்கள் தலைவரின் உத்தரவின் பெயரிலேயே மிகுந்த கண்ணியத்துடன் விமர்சிக்கிறோம். உங்கள் பாணியில் எங்களுக்கும் பேசத் தெரியாமல் இல்லை என்பதை நினைவில் கொள்க.
சட்டமன்றத்துக்கென்று ஒரு மாண்பு இருக்கிறது; அவற்றை மறந்து சிரித்து, விசிலடிக்கும் பொழுதுபோக்கு மன்றமாக சட்டமன்றத்தை மாற்றியிருக்கிறார் முதல்வர் விஜய்.
அமைச்சர்கள் டூயட் பாடல்களுக்கு ஆடுகிறார்கள்.. எம்எல்ஏக்கள் விசில் அடிக்கிறார்கள்.. முதல்வர் சட்டமன்றத்தில் நாடகத்தை அரங்கேற்றுகிறார். இந்த ஆட்சியில் இன்னும் என்னென்ன கொடுமைகளையெல்லாம் பார்க்கப் போகிறோம் என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.