தமிழ்நாடு

கொரோனா வைரஸ் பாதிப்பு: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு திமுக நிதி !

jagadeesh

கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவிடும் வகையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களது ஒரு மாதச் சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் " கொரோனா தொற்று நோய் பரவலால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவிடும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகச் சட்டப்பேரவை உறுப்பினர்களும், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களது ஒரு மாதச் சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

மேலும் "தமிழக அரசும், உடனே போதிய நிதி ஒதுக்கீடு செய்து, அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிட முன்வரவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்களும் இந்த மனிதநேய முயற்சியில் தாங்களும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் நான் வலியுறுத்தியதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

"அறிக்கையில் சுய ஊரடங்கு உத்தரவு குறித்து தெரிவித்துள்ள ஸ்டாலின் " கொரோனா தொடர்பாக மத்திய - மாநில அரசுகள் வெளியிடும் சுய ஊரடங்கு உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் இன்று போல் மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி, மிகுந்த விழிப்புணர்வுடனும் சுய சுகாதாரத்தைக் கடைப்பிடித்தும், கொரோனா தொற்று நோய் பரவலை முழுமையாகத் தடுத்திடவும் வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.