அண்ணா அறிவாலயம் Pt web
தமிழ்நாடு

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை.. திமுக சார்பில் 7 பேர் கொண்ட குழு அறிவிப்பு.!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் திமுக நாளை பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்காக 7 பேர் கொண்ட குழுவைக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

PT WEB

தமிழக அரசியல் களம் சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இத்தேர்தலில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றிடையே நான்கு முனைப்போட்டி நிலவும் என கூறப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தான், ஆளும் கட்சியான திமுக, அதன் கூட்டணி கட்சிகளிடையே பேச்சு வார்த்தை நடத்துவதற்கு இன்று குழுவை அறிவித்திருக்கிறது. இதுகுறித்தான, அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

துரைமுருகன்

அதன்படி, பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவராக கட்சியின் பொருளாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் முதன்மைச் செயலர் அமைச்சர் கே.என். நேரு, துணைப் பொதுச்செயலர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான திருச்சி சிவா, ஆ.ராசா ஆகியோர் குழு உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, கட்சியின் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்களான அமைச்சர்கள் எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோரும் இந்தப் பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த 70 நாட்களுக்கு மேல் காத்திருப்பதாக காங்கிரஸ் கூறி வந்தது. இந்த சூழலில் ஏற்கனவே அறிவித்தபடி நாளை முதல் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக தொடங்க உள்ளது.