கு.க.செல்வம் மறைவு - முதல்வர் இரங்கல்
கு.க.செல்வம் மறைவு - முதல்வர் இரங்கல் ட்விட்டர்
தமிழ்நாடு

முன்னாள் எம்.எல்.ஏ கு.க.செல்வம் மறைவு - முதலமைச்சர், அமைச்சர்கள் அஞ்சலி

PT WEB

திமுக தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கு.க.செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் இணக்கமாக பழகியவர்.

கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதியை வென்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். பின்னர் கட்சி பதவி விவகாரத்தில் தலைமையுடன் அதிருப்தியில் இருந்த கு.க.செல்வம், அப்போதைய மாநில பாஜக தலைவர் எல்.முருகன் மூலம் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவை சந்தித்ததுடன்,  திமுகவையும் விமர்சித்து வந்தார்.

இதனால் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் கு.க.செல்வத்தை நீக்கி திமுக தலைமை உத்தரவிட்டது. இதனை அடுத்து 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து, மாநில செயற்குழு உறுப்பினராக கு.க.செல்வம் செயல்பட்டு வந்தார்.  நாளடைவில் பாஜகவில் முக்கியத்துவம் கிடைக்காத நிலையில் மீண்டும் திமுகவில் இணைந்த கு.க.செல்வம் தலைமை நிலையச் செயலாளராக இருந்தார். அதன்பின்னர் நேரடி அரசியலில் ஒதுங்கியிருந்த கு.க.செல்வம், இதய பிரச்னை காரணமாக போரூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் கடந்த 2 மாதங்களாக சுய நினைவின்றி இருந்துள்ளார்.

இதனிடையே மாரடைப்பு காரணமாக மருத்துவமனையிலேயே கு.க. செல்வத்தின் உயிர் பிரிந்தது. இதனையடுத்து கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் கு.க. செல்வத்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மறைந்த கு.க.செல்வத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, அமைச்சர்கள்
உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, அன்பில் மகேஸ் மற்றும்  துர்கா ஸ்டாலின், மு.க.தமிழரசு உள்ளிட்ட பலரும் கு.க.செல்வம் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.