தமிழ்நாடு

விவிஐபி சலுகையில் ரயில் பயணம் - முன்னாள் அமைச்சர் மகன் கைது 

webteam

திமுகவை சேர்ந்த மறைந்த முன்னாள் வனத்துறை அமைச்சர் செல்வராஜின் பெயரை பயன்படுத்தி, ரயிலில் விவிஐபி சலுகை பெற்று பயணித்த அவரது ம‌‌‌கன் கலைராஜை, ரயில்வே அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பெங்களூருவில் இருந்து இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த பெங்களூர் விரைவு ரயிலில், ரயில்வே கண்காணிப்பு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணித்த திருச்சியைச் சேர்ந்த கலைராஜ் என்பவரது பயண டிக்கெட்டை பரிசோதித்தபோது, அவர் விவிஐபி சலுகையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து விவிஐபி சலுகைக்கான பாஸை அதிகாரிகள் வாங்கி பார்த்தபோது, அது வேறொருவர் பெயரில் இருந்தது தெரியவந்தது. 

தொடர்ந்து கலைராஜனிடம் விசாரித்தபோது, அவர் திமுக ஆட்சிக்காலத்தில் வனத்துறை அமைச்சராக இருந்த செல்வராஜின் மகன் என தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம் செல்வராஜ் உயிரிழந்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்டிருந்த ரயில்வே பாஸை திரும்ப ஒப்படைக்காமல், கலைராஜ் தொடர்ந்து பயணம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் அவரை சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.