துரைமுருகன் முருகன்
தமிழ்நாடு

”அவர்கள் தலைவர்கள் அல்ல தரம் தாழ்ந்த பிம்பங்கள்” - சீமானை மறைமுக சாடிய துரைமுருகன்!

”நீங்கள் வருகிற வழியில் உங்களுடைய கவனத்தை திசை திருப்ப பலர் முயற்சித்திருப்பார்கள். நீங்கள் அந்த திசையை நோக்கி போயிருப்பீர்கள். ஆனால், போன பிறகுதான் தெரிகிறது. அவர்கள் தலைவர்கள் அல்ல ஒரு தரம் தாழ்ந்த பிம்பங்கள் என்று.” - துரைமுருகன்

ஜெனிட்டா ரோஸ்லின்

கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, மயிலாடுதுறை, நாமக்கல் பகுதி மாவட்ட செயலாளர்கள், தஞ்சை முன்னாள் மாவட்ட செயலாளர், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் என 51 நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உட்பட நாம் தமிழர் கட்சியினர் மற்றும் மாற்று கட்சியினர் என சுமார் 3 ஆயிரம் பேர் தங்களை இன்று திமுகவில் இணைத்துக்கொண்டனர். இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த திமுக தலைவர்களும் உடன் இருந்தனர்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின்,

உதயநிதி ஸ்டாலின்

” தேர்தல் வருவதற்கு என்ன 13 மாதங்கள் உள்ளது. தேர்தல் வரும்போது எதிர்க்கட்சிகள்தான் ஒன்று சேர்வார்கள். ஆனால் இப்போது எதிர்க்கட்சியில் இருக்க கூடியவர்கள் ஆளும் கட்சிக்கு வந்து இணைந்திருக்கிறார்கள். எனவே, சட்டமன்றத் தேர்தல் முடிவு என்ன? என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். சட்டமன்ற தேர்தலுக்காக மட்டும் நீங்கள் இன்று இணையவில்லை. திமுகவில் கொள்கையை ஏற்று திமுகவின் தலைமையை ஏற்று இணைந்துள்ளீர்கள்.

நீங்கள் இணைந்த இந்த நிகழ்ச்சியை எதிர்க்கட்சிகள் பார்க்கும்போது அவர்களுக்கு நிச்சயம் வயிறு எரியும். மத்திய அரசு ஒருவரை அனுப்பி வைத்துள்ளது . அவர்தான் ஆளுநர். ஆளுநர் தமிழகத்தின் அடையாளங்களை அழிக்கும் வேளையில் ஈடுபட்டு இருக்கிறார். சட்டசபையில் புறக்கணிக்கிறார். இதற்குதான் அவரை அனுப்பி வைத்துள்ளார்கள். பெரியாரைப் பற்றி விமர்சனம் செய்பவர்களை இனி நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள்.”

துரைமுருகன்

”எந்த எந்த திசையிலிருந்து நீங்கள் வந்தீர்கள் என்பதைப் பற்றி கவலை இல்லை. ஆனால் , எந்த திசையை நோக்கி நீங்கள் வரவேண்டுமோ அந்த திசையை நோக்கி நீங்கள் வந்திருக்கிறீர்கள். நீங்கள் வருகிற வழியில் உங்களுடைய கவனத்தை திசை திருப்ப பலர் முயற்சித்திருப்பார்கள். நீங்கள் அந்த திசையை நோக்கி போயிருப்பீர்கள். ஆனால், போன பிறகுதான் தெரிகிறது. அவர்கள் தலைவர்கள் அல்ல ஒரு தரம் தாழ்ந்த பிம்பங்கள் என்று.

நாம் இந்தி எதிர்ப்போம் சிலர் இந்திய ஆதரிப்பார்கள். நாங்கள் மாநில சுயாட்சி கேட்போம். அதை சிலர் எதிர்ப்பார்கள். இவையெல்லாம் கூட ஒரு அரசியல் என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால், நான் இங்கே துரைமுருகன் ஒரு எம்ஏ பிஎல், ஒரு சட்டமன்ற உறுப்பினர், கழகத்தின் பொருளாளர்.. இவ்வளவு அந்தஸ்துக்களையும் பல ஆண்டுகளாக நான் பெற்றிருக்கிறேன் என்றால், அதற்கு காரணம் ஒரே ஒருவர் தந்தை பெரியார். அவர்கள்தான் தந்தை பெரியார். அவர்கள் இல்லாவிட்டால் இன்னும் நான் கோவணம் கட்டி ஏர் ஓட்டி கொண்டுதான் இருந்திருப்பேன். ஆகவே, நம்மைப் பற்றி நமக்கு புரிய வைத்தவர் தந்தை பெரியார். அதற்காக அவர் பட்ட அவமானங்கள் அதிகம்.

தமிழ் சமுதாயம் இன்றைக்கு இந்தியாவிலேயே தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால், அதற்கு காரணம் தந்தை பெரியார். ஆனால், அந்த பெரியாரைக் கூட இன்றைக்கு எதிர்த்து பேசுகிற அளவுக்கு ஒரு இழிநிலைப் பிறவிகள் உருவாகி இருக்கிறார்கள். ஐயாவினுடைய பணி சாதாரணமானது அல்ல. இந்தியாவில் நாம் அறிவாளிகளாக இருக்கிறோம். என்றால் தந்தை பெரியார் அவர்கள்தான் காரணம்.” என்று தெரிவித்துள்ளார்.