முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் pt web
தமிழ்நாடு

குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் திமுக கவுன்சிலர்கள்.. களையெடுக்கும் தலைமை.. என்ன நடக்கிறது?

மதுரை மாநகராட்சியில் நடந்த 150 கோடி ரூபாய் மோசடியைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பிற மாநகராட்சிகளிலும் திமுக பிரமுகர்களை களையெடுக்கும் நடவடிக்கையை தலைமை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

PT WEB

சென்னை, மதுரை, தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம் மாநகராட்சிகளில் அதிகாரத்தின் நிழலில் அரங்கேறியதாகச் சொல்லப்படும் முறைகேடுகள், திமுக தலைமைக்கு பெரும் தலைவலியைக் கொடுத்திருக்கின்றன. குறிப்பாக மதுரை மாநகராட்சியில் நடந்துள்ள 150 கோடி ரூபாய் மோசடியில் திமுகவின் மண்டலத் தலைவர்கள் கூண்டோடு நீக்கப்பட்டனர். உயர்நீதிமன்றமே கண்டித்து நடவடிக்கையை துரிதப்படுத்த உதவிடும் அளவுக்கு அந்த ஊழல் சென்றிருக்கிறது.

இதனால், மக்களின் கடும் அதிருப்திக்கு ஆளான, ஊழல் புகார்களில் சிக்கிய கவுன்சிலர்கள், ஓரிரு மாதங்களில் தாங்களாகவே பதவி விலகிக்கொள்ள வேண்டும் என கட்சித் தலைமை எச்சரித்து இருப்பதாக கூறப்படுகிறது. அலட்சியம் காட்டினால், 'தகுதிநீக்கம்' எனும் அவமானச் சூழலை சந்திக்க நேரிடும் என்றும் தலைமை அப்பட்டமாக தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மாநகராட்சி

முதல் கட்டமாக, சென்னையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் புகாரில் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. சாலைப் பணிகள், மழைநீர் வடிகால்வாய் திட்டங்கள், கேபிள் பதிக்கும் வேலைகள், கட்டிட அனுமதி என ஒவ்வொரு திட்டத்திலும் 'கமிஷன்' மற்றும் லஞ்சம் பெற்றதாகவும், மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மெத்தனம் காட்டியதாகவும் இந்தக் கவுன்சிலர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் சில கவுன்சிலர்களை, 'உடல்நலக் குறைவு' போன்ற 'தனிப்பட்ட' காரணங்களைக் காட்டி தாங்களாகவே பதவி விலகிக்கொள்ள திமுக தலைமை உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது. உரிய குற்ற ஆவணங்களுடன் சிக்கியுள்ள கவுன்சிலர்களிடம், திமுக தலைமையிலிருந்தே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்துமா? அல்லது வெறும் கண்துடைப்பா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.