கடத்தப்பட்டதாக கூறப்படும் முதுகுளத்தூர் 8-ஆவது வார்டு திமுக ஒன்றிய கவுன்சிலரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை சேர்ந்த ராஜா, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "என் தந்தை சாத்தையா சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் 8-வது வார்டு திருவரங்கத்தில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 3-ம் தேதி காலை 5 மணியளவில் நண்பர்களை சந்திப்பதற்காக வெளியில் சென்றார். ஆனால், வீடு திரும்பவில்லை. இதனால், அவரது தொலைபேசிக்கு எனது தாய் தொடர்பு கொண்டார். அப்போது, அதிமுகவைச் சேர்ந்த தர்மர் உள்ளிட்டோர் அவர்களது கட்டுப்பாட்டில் என் தந்தையை வைத்திருப்பதாக கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து நாங்களும், திமுகவினரும் எனது தந்தையை மீட்டுத் தருமாறு முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் முறையிட்டோம். புகார் கொடுத்துள்ளோம். ஆனால், காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், 6-ம் தேதி எனது தந்தையை அழைத்து வந்து பொறுப்பேற்க செய்தனர். அப்போது என் தந்தையை சந்திக்க முயன்றேன். ஆனால், சுற்றியுள்ளவர்கள் தடுத்துவிட்டனர்.
பதவியேற்பு முடிந்ததும், என் தந்தையை வலுக்கட்டாயமாக அதிமுகவினர் அழைத்துச் சென்றனர். எனது தந்தையை அதிமுகவினர்தான் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளனர். நீதிமன்றம் தலையிட்டு அதிமுகவினரின் கட்டுப்பாட்டில் உள்ள எனது தந்தையை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் ராஜா, புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘‘சாத்தையா யாருடைய சட்டவிரோத காவலிலும் இல்லை’’ என கூறப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுதாரரின் தந்தையான திமுக முதுகுளத்தூர் 8 ஆவது வார்டு கவுன்சிலரை நாளை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவிட்டனர். தவறும் பட்சத்தில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP), இது தொடர்பான அறிக்கையுடன் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தனர்.