மயிலாடுதுறையில் வாக்குச்சாவடி முன்பு திமுக நகர செயலாளர்- போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மயிலாடுதுறையில் காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை திருவிழந்தூர் நகராட்சி தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 131-வது வாக்குச்சாவடி மையத்தின் முன்பு திமுக நகர செயலாளர் குண்டாமணி செல்வராஜ் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தினார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இருசக்கர வாகனத்தை தொலைவில் சென்று நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாகனத்தை அகற்றாவிட்டால் காற்றைப் பிடுங்கி விடுவேன் என போலீசார் எச்சரித்தனர். 'உன்னால் முடிந்தால் செய்துபார்' என திமுக நகர செயலாளர் சவால் விடுத்தார்.
இதையடுத்து அப்பகுதியில் பிரச்னை ஏற்பட இருந்த நிலையில் அங்கு நின்றிருந்த அதிமுக பிரமுகர்கள் திமுக நகர செயலாளருக்கு சாதகமாக பேசி நிலைமையை சரி செய்தனர்.