பெரியார் குறித்த ட்வீட்டர் பதிவை தமிழக பாஜகவினர் நீக்கியது பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்று பெரியாரின் 46வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர் தங்களின் கருத்துகளை பல்வேறு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்திய அளவில் #Periyar என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. அதில், பலரும் பெரியாரின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னுடைய ட்விட்டரில், “கிரேட் பெரியாருக்கு இன்று நாம் நினைவஞ்சலி செலுத்துகிறோம். மதச்சார்பின்மை, முற்போக்கு சிந்தனை மற்றும் சமூக நீதி ஆகியவற்றை மீட்டெடுப்பதற்காக உறுதி கொள்வதே அவருக்கு நாம் செலுத்தும் மரியாதை” என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பெரியார் குறித்து தமிழக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்து பதிவிடப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த ட்விட்டர் பதிவு நீக்கப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டரில், “பெரியாரை இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் தமிழக பாஜக நீக்கியுள்ளது.அப்பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே? அந்தப் பயம் இருக்கட்டும்! மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்! அதிமுக, இதற்காவது புலியாகப் பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா?” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், திமுக எம்பி கனிமொழி, “தந்தை பெரியார், தனி மனிதரல்ல. தமிழர்களை மீட்கவந்த தத்துவம். பெண்ணுரிமை போற்றும் சமூகம் அமைய அயராது உழைத்தவர். பெண்ணுரிமை, நாகரிகம் பற்றி அறியாதவர்களிடமிருந்து இதுபோன்ற கருத்துகள் வருவது சகஜம். இவர்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்போம்” என தன்னுடைய ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.