தமிழ்நாடு

அரவக்குறிச்சியில், கூட்டமாக நிற்பதை எதிர்த்ததால் திமுக தொண்டர்கள்- காவல்துறை வாக்குவாதம்

webteam

அரவக்குறிச்சி தொகுதியில் திமுக தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

மக்களவைக்கான இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. தமிழகத்தில் நான்கு சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவும் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவும் இன்று நடந்து வருகிறது.  இதில், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட தோட்டக்குறிச்சி வாக்குச்சாவடியை பார்வையிட, திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி இன்று காலை வருவதாக இருந்தது.

அவரை வரவேற்க, திமுக தொண்டர்கள் வாக்குச்சாவடிக்கு வெளியே, 300 மீட்டர் தொலைவில் திரண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார், அவர்களை கலைந்து செல்லும்படி கூறினர். ’நாங்கள் வாக்கு சாவடியில் இருந்து முந்நூறு மீட்டருக்கு வெளியேதான் நிற்கிறோம். இங்கிருந்து ஏன் வெளியேற வேண்டும். இதனால் யாருக்கு என்ன பாதிப்பு?’’ என்று திமுகவினர் கேட்டனர். 

''நீங்கள் நிற்பதால் வாக்களிக்க வருபவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்'' என்று போலீசார் கூறினர். இதையடுத்து திமுக தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.