2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அதிமுக, வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால் 3-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால், சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, முக்கிய நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்து வெளியேறினர். குறிப்பாக, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம், கரூர் மற்றும் விராலிமலை அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்.
இதையடுத்து, அத்தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து திருச்சி கிழக்குடன் சேர்த்து 7 தொகுதிகளுக்கு விரைவில், தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தவிர்த்த மற்ற 5 தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.
இந்தச்சூழலில் தான், தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. மேலும், செப்டம்பர் 16ஆம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச்சூழலில் தான், தவெக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை இன்னும் அறிவிக்காத நிலையில், எதிர்க்கட்சியான திமுக இரு தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை தற்போது அறிவித்திருக்கிறது.
அதன்படி, மதுராந்தகம் (தனி) தொகுதியில், திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் ஐ.பரந்தாமனும், தாராபுரம் (தனி) தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் வழக்கறிஞர் எஸ். சுகன்யாவும் திமுக சார்பில் போட்டியிடவிருக்கின்றனர்.