நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி வேட்பாளர்கள் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. அதோடு, கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு சென்னை மாநகராட்சியில் வார்டுகளை ஒதுக்கீடு செய்துள்ளது.
ஒரே நாளில் 6 மற்றும் 7ஆவது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நகராட்சி, பேரூராட்சி வார்டுகளுக்கான வேட்பாளர்கள் பெயர் 6 ஆவது பட்டியலில் இடம்பெற்றிருந்தது. அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு உள்ளிட்ட 5 பேரூராட்சிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 7ஆவது பட்டியலில் மதுரை, சிவகாசி ஆகிய மாநகராட்சிகளுக்கு வேட்பாளர்கள் பெயர் இடம்பெற்றுள்ளன. மேலும், ஒட்டன்சத்திரம், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்பட 9 நகராட்சி வார்டுகளுக்கு வேட்பாளர்களை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மதுரை மாவட்டம் பரவை, திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் உள்பட 6 பேரூராட்சிகளுக்கும், மேலும் காரியாபட்டி, ஆர்.எஸ்.மங்களம், முத்தூர் உள்பட 32 பேரூராட்சிகளுக்கும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சென்னை மாநகராட்சியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 17 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் 6, 37, 92, 165 உள்ளிட்ட வார்டுகள் அடங்கும். அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சென்னை மாநகராட்சியில் 6 வார்டுகளை திமுக ஒதுக்கியுள்ளது. 18, 72, 135 உள்ளிட்ட 6 வார்டுகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.