இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி Pt web
தமிழ்நாடு

தொகுதிப் பங்கீடு | இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இல்லை 5 மட்டுமே.. ஒப்பந்தம் கையெழுத்து.!

திமுக கூட்டணியில் நான்கு கட்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.

Premkumar S

திமுக கூட்டணியில் நான்கு கட்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.

2021 தேர்தலில் ஒதுக்கிய அதே 6 தொகுதிகளையாவது தர வேண்டும் என்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட பேரத்திற்க்குப் பிறகு, 1 தொகுதி குறைவாக 5 தொகுதிகளே தற்போது ஒதுக்கி இருக்கிறது திமுக. தொகுதிப் பங்கீட்டில், காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் கொடுக்கும் போது எங்களுக்கு மறுப்பது நியாமல்ல எனத் தொடர்ந்து கூறிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எத்தனைத் தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு என்பது குறித்துப் பார்க்கலாம்.

சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 11 கட்சிகளுடன் கூட்டணி வைத்த திமுக 2026 தேர்தலையொட்டி ஆளும் திமுக 20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் மிகப்பெரிய கூட்டணியை அமைத்திருக்கிறது. இது அக்கட்சிக்கு சாதகமாக பார்க்கப்பட்டாலும், அதுவே, தொகுதிப்பங்கீட்டில் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. அதிக கட்சிகள் கூட்டணியில் இருப்பதால், தொகுதி குறைவாக தரப்படும் எனத் கறார் காட்டிய திமுக. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடளுமன்றத் தேர்தலில் இருந்து, கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் குறைவான தொகுதிகளையே ஒதுக்க முன்வந்திருந்தது.

ஆனால், இரட்டைத் இலக்கத்தில் தொகுதிகள் வேண்டும் அல்லது 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டதை விட அதிக தொகுதிகள் வேண்டும் எனக் கேட்டு, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் திமுகவுடனான 3 கட்ட பேச்சுவார்த்தைகளில் மல்லுக்கட்டி வந்த நிலையில், இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் நான்கு கட்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகு 5 தொகுதிகள் என்ற அளவில் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.

ஏற்கனவே, காங்கிரசுக்கு 28 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் என 5 கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. இந்த சூழலில் இன்று, ஆறாவது கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில், காங்கிரஸ் கட்சி மட்டுமே தனது பேர வலிமையால் 3 தொகுதிகளை அதிகமாக பெற்றிருக்கிறது. இந்த சூழலில் தான், திமுகவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 8 தொகுதிகளைக் கேட்டு வருகிறது.

பெ. சண்முகம்

3 கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்திருக்கும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், காங்கிரஸுக்கு 3 தொகுதிகள் அதிகமாக கொடுத்துவிட்டு தங்களுக்கு தொகுதிகளை குறைப்பது நியாமல்ல எனவும் குறைவான தொகுதிகள் கொடுக்கும்பட்சத்தில் கட்சியுடன் கலந்தாலோசித்துவிட்டு முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தான், 2021 தேர்தலில் போட்டியிட்ட அதே 6 தொகுதிகளை திமுக தர முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவ்வாறு, 6 தொகுதிகள் மட்டுமே திமுக கொடுக்கும்பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.