தமிழ்நாடு

துணை மேயர்: 21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி வெற்றி

Sinekadhara

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் துணை மேயர் பதவிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது.

திமுக கூட்டணியில் துணை மேயர்களை பொருத்தவரையில், காங்கிரஸுக்கு சேலம், காஞ்சிபுரமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூரும், மதிமுகவுக்கு ஆவடியும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கடலூரும் ஒதுக்கப்பட்டன. பிற இடங்களில் திமுகவே களம் இறங்கியது.

இதில் திமுக போட்டியிட்ட நாகர்கோவில் மற்றும் ஓசூர் மாநகராட்சிகளில் மட்டும் துணை மேயர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. பிற இடங்களில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியின்றி தேர்வாகின. ஓசூரில் அதிமுக சார்பில் ஜெயபிரகாஷ் என்பவர் போட்டியிட்ட நிலையில், திமுகவின் ஆனந்தையா 25-க்கு19 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாகர்கோவிலில் திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் மேரி பிரின்ஸியை எதிர்த்து, போட்டி வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் களம் இறங்கினார். இதில் மேரி பிரின்சி 28 வாக்குகள் பெற்று துணை மேயரானார். ராமகிருஷ்ணனுக்கு 24 வாக்குகள் பெற்றார்.